ஊரடங்கிற்கு மத்தியில் – நாடெங்கிலும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்கின்றனர்

நிறுவனமயப்படுத்துவதை பாதுகாப்புத் தொழிற் சங்கங்கள் எதிர்க்கின்றன

ஆத்மநிர்பார் பாரத் முன்முயற்சியின் 4 வது அத்தியாயத்தின் ஒரு பகுதியாக, போர்த் தளவாடங்கள் தொழிற்சாலை வாரியத்தின் (OFB) நிறுவனமயப்படுத்துவதையும், பாதுகாப்பு உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீடு (FDI) அதிகரிப்பதையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை வெளியிட்டார். இந்தத் திட்டங்களுக்கு அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் (AIDEF), இந்திய தேசிய பாதுகாப்புத் தொழிலாளர் சம்மேளனம் (INDWF) மற்றும் பாரதிய பிரதிரக்ஷா மஜ்தூர் சங்கம் (BPMS) ஆகிய மூன்று பாதுகாப்புத் தொழிலாளர் சங்கங்களும் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

பாதுகாப்பு உற்பத்தியில் அன்னிய நேரடி முதலீடு வரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்த இருப்பதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். போர்த் தளவாடங்கள் தொழிற்சாலைகளை நிறுவனமயமாக்குவது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் வகிக்கிறது, தற்போதைய அரசாங்கத்தின் முதல் 100 நாட்களில் செயல்படுத்த அறிவிக்கப்பட்ட முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும். இது “போர்த் தளவாடங்கள் தொழிற்சாலைகளின் செயல்திறனை மேம்படுத்துதல், தரத்தை உயர்த்துதல் மற்றும் அவற்றின் தயாரிப்புகளின் விலைகளை போட்டி போடக் கூடிய வகையில் செய்வது” என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகிறது.

அனைத்து வகையான பொது மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை இருக்கும் இந்த நேரத்தில் தொழிலாளர் பிரதிநிதித்துவ அமைப்புகளுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட அரசாங்கத்தின் இந்த ஒருதலைப்பட்சமான முடிவை, பாதுகாப்புத் தொழிலாளர் சங்கங்கள் விமர்சித்தன. போர்த் தளவாடங்கள் தொழிற்சாலை வாரியத்தை, நிறுவனமயப்படுத்துவதென்பது போர்த் தளவாடங்கள் தொழிற்சாலைகளை தனியார்மயமாக்குவதற்கான ஒரு முன்னோடியே தவிர வேறில்லை என்று அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர், அதை அவர்கள் முழுவதுமாக எதிர்க்கின்றனர். இதன் விளைவாக பல தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இந்த முடிவை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அதை செய்யத் தவறினால், நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்குமென அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

“பாதுகாப்புத் துறை மற்றும் பயணிகள் விமான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் (எம்.ஆர்.ஓ) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு” என்ற அறிவிப்பு, இந்திய விமானப்படையின் அடிப்படை பழுதுபார்க்கும் டிப்போக்களை தனியார்மயமாக்குவதற்கு முன்னோடியென தொழிற்சங்கங்கள் விமர்சித்துள்ளன. வன்பொருட்களைப் பராமரிப்பதிலும், விமானப்படையின் பல முக்கிய தொழில்நுட்ப ரகசியங்களைப் பாதுகாப்பதிலும் அடிப்படை பழுதுபார்க்கும் டிப்போக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த முக்கியமான துறையை தனியார் நிறுவனங்களுக்குத் திறந்து விடுவதென்பது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தொழிற் சங்கங்கள் எச்சரித்துள்ளன.