நாடு தழுவிய போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு

தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகள் மீது, குறிப்பாக கொரோனா பெருந் தொற்றுநோய் மற்றும் முடக்கத்தின் போது அரசாங்கம் நடத்திவரும் தாக்குதல்களுக்கு எதிராக, ஐஎன்டியுசி (INTUC), ஏஐடியுசி (AITUC), எச்எம்எஸ் (HMS), சிஐடியு (CITU), ஏஐயுடியுசி (AIUTUC), டியுசிசி (TUCC), சேவா (SEWA), ஏஐசிசிடியு (AICCTU), எல்பிஎப் (LPF) மற்றும் யுடியுசி (UTUC) ஆகிய பத்து மத்திய தொழிற்சங்கங்கள் சூலை 3 ம் தேதி நாடு தழுவிய எதிர்ப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளன.

கோடிக் கணக்கான தொழிலாளர்களின் நலன்களை, குறிப்பாக அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கத் தவறிய அரசாங்கத்தை தொழிற்சங்கங்கள் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கை கண்டித்துள்ளது. இந்த தொழிலாளர்களுக்கு உணவையும், பிற அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க;’ அரசாங்கம் தவறிவிட்டது. தத்தம் வீடுகளுக்குத் திரும்புவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பணத்தைக் கொடுப்பதற்கும், பாதுகாப்பான மற்றும் சரியான போக்குவரத்தை வழங்கவும் அரசாங்கம் தவறிவிட்டது. இந்தத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.

அரசு ஊழியர்கள், வங்கி மற்றும் காப்பீட்டுத் துறை, ரயில்வே, நிலக்கரி மற்றும் பல துறை தொழிலாளர்கள் மீது ஊதிய முடக்கம், பணிநீக்கம் மற்றும் கடுமையான பணி நிலைமைகள் ஆகிய தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதை இந்த அறிக்கை கண்டிக்கிறது. அனைத்து துறைகளிலும் உள்ள தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் வேலைகளை இழந்துள்ளனர், அல்லது கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் அது சுட்டிக்காட்டுகிறது. இதுவரை இல்லாத அளவில் வேலையின்மை அதிகரித்திருக்கிறது.

தொழிலாளர்கள் வென்ற உரிமைகளை மறுப்பதன் மூலமாகவும், தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலமாகவும் தொழிலாளர்களை மேலும் தாக்கவும், சுரண்டலைத் தீவிரப்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை தொழிற்சங்கங்கள் கண்டித்துள்ளன.

பொதுத்துறை நிறுவனங்களில் முதலீட்டை விலக்கிக் கொள்ளுதல், பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், முக்கிய துறைகளில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தல், நமது இயற்கை வளங்களை அதிக அளவில் இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோகங்கள் கொள்ளையடிக்க வழிவகுத்தல் என இந்த எல்லாவற்றையும் சுயசார்பு கொண்ட இந்தியா என்ற பெயரில் செயல்படுத்துவதற்கு, கொரோனா பெருந் தொற்றுநோயை ஒரு திரையாக அரசாங்கம் பயன்படுத்துவதை அறிக்கை விமர்சிக்கிறது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னணிப் போராளிகளாக இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், ஆஷா, அங்கன்வாடி மற்றும் நண்பகல் உணவுப் பணியாளர்கள் போதுமான மற்றும் தரமான பாதுகாப்பு கருவிகளும் நல்ல வேலை நிலைமைகளும் கோரி மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளன.

அரசாங்கத்தின் 20 லட்சம் கோடி உதவித் தொகுப்பானது, உண்மையில், முக்கியமாக பல்வேறு துறைகளுக்கு கடன் உத்தரவாதமாக கொடுத்திருப்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1 – 1.5 சதவிகிதம் மட்டுமே என்பதையும், மற்றவை ஏற்கனவே உள்ள பல நலத்திட்டங்களும் பட்ஜெட் ஒதுக்கீடுகளாகும் என்பதையும் இந்த அறிக்கை  வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.

அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோத கொள்கைகளை எதிர்த்து நாடெங்கிலும் தொழிலாளர்களும், விவசாயிகளும், எல்லா உழைக்கும் மக்களும் சூலை 3 அன்று தீவிரமான ஆர்பாட்டங்களைத் திட்டமிட்டு நடத்துமாறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்காவிட்டால், அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போமென அவர்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.