வேளாண் விளைபொருட்கள் விற்பனையை தாராளமயமாக்க அவசரச் சட்டங்கள்:

விவசாயிகள் மற்றும் விவசாய விளைபொருட்களின் மீது வர்த்தக ஏகபோகங்களின் மேலாதிக்கத்தை நிறுவுதல்

மத்திய அமைச்சரவை அங்கீகரித்த, “வேளாண்மை உற்பத்தி விற்பனை மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வழிவகுத்தல்) அவசரச் சட்டம், 2020” மற்றும் “விலைக்கு உத்திரவாதம் மற்றும் பண்ணை சேவைகளில் விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த அவசரச் சட்டம், 2020” ஆகிய இரண்டு அவசரச் சட்டங்களை 2020 சூன் 5 ஆம் தேதி, இந்திய குடியரசுத் தலைவர் அறிவித்திருக்கிறார். அத்தியாவசிய பொருட்கள் சட்டத் (ஈ.சி.ஏ) திருத்தத்திற்கும் மத்திய அமைச்சரவை சூன் 3 ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.

“வேளாண்மை உற்பத்தி விற்பனை மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வழிவகுத்தல்) அவசரச் சட்டம், 2020”, வேளாண் விளைபொருட்கள் விற்பனையைத் திறந்து விடுவதையும், மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும் உள்ள வர்த்தகத்திற்கான தடைகளை நீக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது “ஒரு இந்தியா, ஒரு விவசாய சந்தை” என்பதை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநிலத்திற்குள் விவசாயமும் விற்பனையும், வர்த்தகமும் மாநிலத் துறைகளாக இருக்கின்றன. இருந்தாலும், உணவுப்பொருட்களின் விற்பனையும், வர்த்தகமும் பொதுப் பட்டியலின் ஒரு பகுதியாகும் என்பதைப் பயன்படுத்தி, மத்திய அரசாங்கம் இந்த அவசரச் சட்டத்தைத் திணித்திருக்கிறது. இது விவசாய வர்த்தகத்தில் முதலாளித்துவ ஏகபோகங்கள், ஏபிஎம்சி மண்டி அமைப்பைத் தவிர்த்து, நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் விவசாய விளைபொருட்களை வாங்குவதற்கான சட்ட கட்டமைப்பை வழங்குகிறது. அதற்கு இந்த நிறுவனங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தங்களை அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டியதாகும்.

“விலைக்கு உத்திரவாதம் மற்றும் பண்ணை சேவைகளில் விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த அவசரச் சட்டம், 2020”, வேளாண் வர்த்தக ஏகபோகங்களும், உணவு பதப்படுத்தும் நிறுவனங்களும், பெரிய சில்லறை விற்பனையாளர்களும் மற்றும் ஏற்றுமதியாளர்களும் நாட்டில் எந்த இடத்திலுமுள்ள விவசாயிகளுடன் அவர்களுடைய விளைபொருட்களை வாங்குவதற்காக முன்கூட்டியே ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான கட்டமைப்பை வழங்குகிறது.

விவசாய விளைபொருட்களில் பின்வருவனவும் அடங்கும்:

  • உணவுப் பொருட்களில் மக்களின் பயன்பாட்டிற்கான எண்ணெய் வித்துக்களும் எண்ணெய் வகைகளும், கோதுமை, அரிசி போன்ற அனைத்து வகையான தானியங்களும், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், மசாலா பொருட்கள், கரும்பு ஆகியனவும், கோழி, பன்றி, ஆடு, மீன்கள் மற்றும் பால் பொருட்களும் இயற்கை அல்லது பதப்படுத்தப்பட்ட வடிவத்தில் உள்ள அனைத்தும் அடங்கும்;
  • புண்ணாக்கு மற்றும் பிற செறிவுகள் உள்ளிட்ட கால்நடை தீவனம்;
  • கச்சா பருத்தி, பருத்தி விதைகள் மற்றும் கச்சா சணல்.

முதலாளித்துவ வர்த்தக நிறுவனங்கள் விவசாயிகளுடன் அவர்களுடைய விளைபொருட்களுக்கு ஒரு பயிர் பருவம் முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். இது ஒப்பந்த வேளாண்மை மற்றும் எதிர்நோக்கு வர்த்தகத்திற்கான இடத்தை விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது முதலாளித்துவ வர்த்தக ஏகபோகங்கள், அனைத்து வகையான விவசாய விளைபொருட்களின் வர்த்தகத்தின் மீது தங்கள் கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் நிலைநாட்ட உதவும்.

இந்த நடவடிக்கைகளின் விளைவாக விவசாய விளைபொருட்களை முதலாளித்துவ ஏகபோகங்கள் தீர்மானிக்கும் அளவுகளிலும், அவர்கள் தீர்மானிக்கும் விலையிலும் விற்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். உணவைப் பதப்படுத்தும் மற்றும் ஏகபோக வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய இலாபத்தை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் என்ன பயிர்கள் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் அதன் அளவையும் ஆணையிடுகின்றன என்பதை ஒப்பந்த வேளாண்மை அனுபவம் காட்டுகிறது.

இந்த அவசரச் சட்டங்கள், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டில் எந்தப் பகுதியிலும் விற்க அனுமதிக்கும் என்றும் அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவுமென்றும் அரசாங்கம் கூறுகிறது. இது, உண்மையை தலை கீழாக மாற்றுகிறது. இந்த அவசரச் சட்டங்கள் விவசாயிகளை மேலும் அதிகாரமற்றவர்களாக ஆக்கும். இந்த அவசரச் சட்டங்கள், பெரும் நிறுவன வர்த்தகம் மற்றும் வேளாண் பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு எங்கு வர்த்தகம் செய்யலாம், எதை வர்த்தகம் செய்யலாம் என்பதற்கு தற்போதுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதன் மூலம் அவர்களுடைய நலன்களை முன்னெடுத்துச் செல்லும். ஆகவே “அதிகாரமளித்தல்” மற்றும் “பாதுகாப்பு” என்பதெல்லாம் தனிப்பட்ட முதலாளிகளுக்குத் தானே ஒழிய விவசாயிகளுக்கு அல்ல.

இந்தியாவில் பெரும்பான்மையான விவசாயிகளிடம் விற்பதற்கு குறைந்த அளவிலான விளைபொருட்களே இருக்கின்றன. அவற்றை அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் அவர்களுக்கு அருகில் உள்ள மண்டிக்கு கொண்டு செல்கிறார்கள். தூரத்தின் காரணமாக, போக்குவரத்து செலவு ஒரு பெரிய தடையாக இருக்கிறது. அவர்கள் ஏன் தங்கள் சொந்த மாநிலத்திற்கு வெளியே சந்தைகளை நாட விரும்புகிறார்கள்? வேறொரு மாநிலத்தில் சாதகமான விலை கிடைப்பதாக இருந்தாலும், சேமிப்பு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதில் பெரும்பாலானவற்றை ரத்து செய்து விடும்.

தங்களுடைய விளைபொருட்களை வாங்குவதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டுமென்றும், அதை அவர்கள் தங்கள் பண்ணைகளுக்கு மிக அருகில் ஒரு இடத்தில் விற்க முடிய வேண்டும் என்பதும் விவசாயிகளுடைய கோரிக்கைகளாகும். ஆனால் இந்த செயல்முறையை முற்றிலுமாக அகற்ற அரசாங்கம் அவசரச் சட்டத்தை நிறைவேற்றி வருகிறது. இது அதிகபட்ச இலாபங்களை அடைவதற்காக வேலை செய்யும் ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களின் தயவில் விவசாயிகளை நிறுத்துவதற்கு மட்டுமே உதவுமே ஒழிய உற்பத்தியாளர்களுக்கு இலாபகரமான விலைகளை உத்தரவாதம் செய்வதற்கு அல்ல.

கொரோனா நிவாரண தொகுப்பின் ஒரு பகுதியாக, விவசாய பொருட்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு நிதி வழங்குவதற்கான கடன்களை அரசாங்கம் அறிவித்தது. குளிரூட்டப்பட்ட சேமிப்பு வசதிகள், உணவைப் பதப்படுத்துதல் மற்றும் பிற உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்ய இந்த கடன்கள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இந்த உள்கட்டமைப்புகள் “பண்ணை நுழைவாயிலில்” அமைக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது, அதாவது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வெகு தூரம் கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லாமல், விவசாய விளைபொருள்கள் அறுவடை செய்யப்படும் இடங்களிலேயே அமைக்கப்படும் என்கிறது. இது ஒரு மோசடியாகும். ஏனெனில் இலாபம் தேடும் தனியார் நிறுவனங்கள் பெரும்பாலான சிறிய விவசாயிகளைத் தேடிப் போவதால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மேலும், இதனால் நிறுவனங்களுக்கு எந்தச் செலவுகள் ஏற்பட்டாலும் அது உற்பத்தியாளர்களிடமிருந்தும் அல்லது உற்பத்தியின் சில்லறை விலையிலிருந்தும் பெற்றுக் கொள்ளப்படும்.

அத்தியாவசிய பொருட்கள் சட்டம் என்பது 1955 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். பதுக்கல் அல்லது கறுப்பு சந்தையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சில பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. தானியங்கள், பருப்பு வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், சர்க்கரை மற்றும் அத்தியாவசியமானதாக அரசாங்கம் அறிவிக்கும் பிற பொருட்களை நியாயமான விலையில் மக்களுக்குக் கிடைப்பதற்கு அவற்றின் உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கு பல்லாண்டுகளாக அரசாங்கங்களால் பல முறை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. நகரங்களில் உள்ள உழைக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான கருவியாக இது இருந்து வந்திருக்கிறது.

அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்தத்தின் மூலம், தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பொருட்கள் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கப்படும். பொதுமக்களுடைய நுகர்வுக்கான இந்த அத்தியாவசிய பொருட்களை வர்த்தக நிறுவனங்கள் பதுக்கவும் ஊகங்களில் ஈடுபடுவதற்குமான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இது நீக்கும்.

இப்படிப்பட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குவதையும், ஊகங்களில் ஈடுபடுவதையும் சட்டப்பூர்வமாக்குவதற்கான இந்த நடவடிக்கையை, அரசாங்கத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களும் அமைச்சர்களும் “விவசாயிகளின் முன்னேற்றத்திற்கானதாக” கூற முயற்சிக்கின்றனர்.

இந்த செய்தித் தொடர்பாளர்களின் கூற்றுப்படி, அத்தியாவசிய பொருட்கள் சட்டம், விவசாயிகளுக்கு அவர்களுடைய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலையை கிடைக்க விடாமல் தடுத்ததோடு, குளிரூட்டப்பட்ட சேமிப்பு மற்றும் கிடங்கு வசதிகளில் முதலீடுகளுக்கும் ஆதரவளிக்கவில்லை. இந்த வசதிகளோடு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்திற்காகவே மத்திய கிடங்கு நிறுவனமும், மாநில கிடங்கு நிறுவனங்களும் அமைக்கப்பட்டன. இந்த பொது நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு பதிலாக, தனியார் நிறுவனங்களுடைய இலாபம் ஈட்டும் குறுகிய நோக்கத்திற்காக இத்தகைய வசதிகளை உருவாக்குவதற்கு நிதியளிக்க அரசாங்கம் விரும்புகிறது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்தத்தின் உண்மையான நோக்கமானது, பெரிய வர்த்தகர்களும் ஊக வணிகர்களும் பயனடைவதற்காகவே என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

“விவசாயத்திற்கு இன்று ஒரு வரலாற்று முக்கியமான நாள். 1947 இல் நாடு சுதந்திரம் பெற்றது, ஆனால் விவசாயிகளுக்கு இந்த அவசரச் சட்டங்கள் மூலம் சுதந்திரம் கிடைக்கிறது” என்று இந்த அவசரச் சட்டங்களை அறிமுகப்படுத்திய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் 2020 ஜூன் 3 அன்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

“விவசாயிகளுக்கு சுதந்திரம் கொடுப்பதிலும்”, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதிலும் இந்த அவசரச் சட்டங்கள் முக்கிய பங்காற்றும் என்ற அரசாங்கத்தின் கூற்றுகளுக்கு மாறாக, அவை தவிர்க்க முடியாமல் பெரும்பான்மையான விவசாயிகளை பெரிய வேளாண் வணிக முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அடிமைப்படுத்துவதை அதிகரிக்கும். .

இந்த அவசரச் சட்டங்கள் மூலம், அனைத்து விவசாய விளைபொருட்களையும் கொள்முதல் செய்தல், சேமிப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை உறுதி செய்தல் மற்றும் இலாபகரமான விலைகளுக்கு உத்தரவாதம் அளித்தல் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதிசெய்வதற்கான கடமையை அரசு முழுவதுமாக கைகழுவி விட்டுக் கொண்டிருக்கிறது.